லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண், "வீடியோ கேம்' மீது கொண்ட வெறித் தனமான ஆர்வத்தால், தன் குழந்தைகளை பட்டினியால் பரிதவிக்க விட்டதுடன், செல்லமாக வளர்த்த இரண்டு நாய்களையும் பட்டினியில் போட்டு சாகடித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்தவர் கிளாடியா என்ற பெண்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 33 வயதாகிறது. 9, 10 மற்றும் 13 வயதுகளில் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர், செல்லமாக இரண்டு நாய்களையும் வளர்த்து வந்தார். இவரின் கணவர் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களாகவே, "வீடியோ கேம்' விளையாடுவதில் ஆர்வம் காட்டினார், கிளாடியா. குறிப்பாக, "ஸ்மாலர் வேர்ல்டு' என அழைக்கப்படும், "வீடியோ கேம்' மீது, இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. துவக்கத்தில் சில மணி நேரங்களை இதற்காக செலவிட்ட கிளாடியா, அடுத்த சில மாதங்களில், விளையாட்டிலேயே மூழ்கி விட்டார். நேரம் காலம் தெரியாமல், அந்த விளையாட்டிலேயே தொடர்ந்து ஈடுபட்டார். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூட தூங்குவது இல்லை. அந்த அளவுக்கு, "வீடியோகேம்' அவரை அடிமைப்படுத்தி விட்டது. இதனால், இவர் குழந்தைகள் சாப்பிட உணவில்லாமல் அவதிப்பட்டனர்.
குழந்தைகள் பசியால் துடித்தால், கடைகளில் விற்கும் குளிர்பானங்களை வாங்கி கொடுத்து விடுவார். மேலும், "பேக்' செய்யப்பட்ட உணவு வகைகளையும், அவ்வப்போது வாங்கி கொடுப்பார். சூடான உணவை சாப்பிடுவதற்காக அந்த குழந்தைகள் ஏங்கின. தொடர்ந்து ஒரே மாதிரியான ரெடிமேட் உணவுகளையே சாப்பிட்டதால், குழந்தைகளுக்கு சலிப்பு வந்து விட்டது. இதனால், சில நாட்கள் சாப்பிடாமலேயே பசியால் அவதிப்பட்டனர். குழந்தைகள் நிலைமை இப்படி என்றால், அவர் வளர்த்த செல்ல நாய்களின் நிலைமை மிகவும் மோசம். "வீடியோ கேம்' மோகத்தில், நாய்களை கவனிப்பதையே கிளாடியா மறந்து விட்டார். இதனால், நாய்கள் பசியால் துடித்து, இறந்து விட்டன. ஆறு மாதங்களாக, அந்த இரண்டு நாய்களின் உடல்களும் வீட்டுக்குள்ளேயே கிடந்தன. அவற்றை வெளியில் தூக்கிப் போட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல், தொடர்ந்து, "வீடியோ கேம்' விளையாடினார்.
இறந்துபோன நாய்களின் உடல்கள் அழுகி, துர்நாற்றம் அடித்தன. இது குறித்து தகவல் தெரிந்த பக்கத்து வீட்டுக்காரர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கிளாடியா வீட்டுச் சூழலை பார்த்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சாப்பாட்டு அறையிலேயே, இரண்டு நாய்களின் உடல்களும் அழுகிய நிலையில் கிடந்தன. வீணாகிப் போன உணவுப் பொருட்களும், குப்பை கூளங்களும் வீடு முழுவதும் நிறைந்து கிடந்தன. இது குறித்து கிளாடியாவுக்கு எதிராக பிரிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "இனிமேல் கிளாடியா, "வீடியோ கேம்' விளையாடக் கூடாது. செல்லப் பிராணிகளையும் வளர்க்க, அவருக்கு தடை விதிக்கப்படுகிறது. அவருடைய அஜாக்கிரதை காரணமாக இரண்டு நாய்கள் இறந்துள்ளதோடு, அவரின் குழந்தைகளும் பசியால் வாடியுள்ளன. எனவே, 75 மணி நேரம், அவர் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்காக, அவருக்கு பணம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது' என, தீர்ப்பளித்தது.
No comments:
Post a Comment