Tuesday, February 12, 2008

ஷார்ஜாவில் இந்திய வர்த்தக மையம்

துபாய்: இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே வர்த்தக தொடர்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில், ஷார்ஜாவில் 50 லட்சம் டாலர் செலவில், இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் அமைக்கப்படவுள்ளது.இங்கு இந்திய வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களின் நிரந்தர கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.இந்தியாவுக்கு வெளியே இப்படி ஒரு நிரந்தர வர்த்தக மையம் அமைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தின் மூலம் இந்தியாவை பொருளாதார சக்தியாக்கும் முயற்சிக்கு மேலும் வலு சேரும்.இதுதொடர்பான ஒப்பந்தத்தில், ஷார்ஜாவில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில் கவுன்சில் (ஐபிபிசி) மற்றும் ஷார்ஜா வர்த்தக சபையும் நேற்று கையெழுத்திட்டன.ஷார்ஜா வர்த்தக சபை சார்பில் அகம்மது முகம்மது அல் மிட்பாவும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் சுதேஷ் அகர்வாலும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வின்போது இந்தியத் தூதர் வேணு ராஜாமணி, ஐபிபிசி துணைத் தலைவர் கே.வி. சம்சுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த வர்த்தக மையத்திற்குத் தேவையான நிலத்தை ஷார்ஜா அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் ஷேக் சுல்தான் பில் முகம்மது அல் குவாசிமி பிறப்பித்துள்ளார். இந்த மையத்தை நிறுவி நிர்வகிக்கும் பொறுப்பு ஐபிபிசியிடம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்தத் திட்டம் குறித்து இந்திய அரசு யோசனை தெரிவித்தது. இதை ஷார்ஜா வர்த்தக சபை ஏற்றுக் கொண்டு இதற்கான முயற்சிகளை எடுத்தது.20 ஆயிரம் சதுர அடியில் அமையவுள்ள இந்த மையத்தில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2 மேல் தளங்களுடன் கூடிய கட்டடம் எழுப்பப்படும். மொத்த கட்டுமான பரப்பளவு 50 ஆயிரம் சதுர அடியாக இருக்கும். இதைக் கட்டி முடிக்க தோராயமாக 50 லட்சம் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இங்கு ஆடிட்டோரியம், இந்திய ஹோட்டல் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிவடையும்.

துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்


துபாய்: துபாயில் தஞ்சாவூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலிபுல்லாஹ் முஹம்மது ஜியாவுதீன்(38). வளைகுடா கனவுகளுடன் கடந்த கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று அபுதாபியில் உள்ள லீடர்ஸ் டெக்கர் எனும் நிறுவனத்தில் பணிக்காக சுமார் ரூ. 1 லட்சம் செலவு செய்து பணியில் சேர்ந்தார்.லெபனானைச் சேர்ந்தவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். பணியில் சேர்ந்த இரண்டரை மாதத்திலேயே அந்நிறுவன உரிமையாளர் உன்னை இந்தியாவுக்கு அனுப்பப் போகிறேன் என்றதும் அந்நிறுவனத்தை விட்டுவிட்டு துபாய் மெட்ரோ ரெயில் திட்டத்தில் சப்-காண்டிராக்டரிடம் பணிக்கு சேர்ந்து விட்டார்.அந்நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போது கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதியன்று ஜடாஃப் எனும் இடத்தில் பணியில் இருந்தபோது கம்பியின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார்.இதில் அவரது கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்பொழுது அவரது காலில் பிளேட் வைக்கப்பட்டுள்ளதால் நடக்க முடியாத நிலையில் உள்ளார்.அதனால் தற்போது தாயகம் செல்லவேண்டும் என்ற சூழலில் பாஸ்போர்ட் அவரிடம் இல்லாத காரணத்தால் (இதை வேலை தந்த நிறுவனம் வாங்கி வைத்துள்ளது) அதற்கும் வழியில்லாத சூழ்நிலை நிலவுகிறது. இந் நிலையில் யாரேனும் உதவ முன் வருவார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஜியாவுதீன். இவரது தொலைபேசி எண் 050-9044240.சட்டரீதியிலோ அல்லது வேறு வழியிலோ உதவ முடிந்தவர்கள் உதவலாம்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதர் மாயம்: தாலிபான்கள் கடத்தல்?


இஸ்லமாபாத்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டு தூதர் திடீரென மாயமாகிவிட்டார். அவரை தலிபான்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் தாரிக் அசிசூதீன், தனது நாட்டின் பெஷாவர் நகரிலிருந்து காரில் காபூல் நகருக்கு சென்று கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியான கைபர் என்ற இடத்தில் தனது காரை விட்டு விட்டு, மற்றொரு காரில் அவர் செல்ல வேண்டும்.ஆனால் எல்லைப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே அவரது கார் மாயமாகிவிட்டது. தூதரும் அவரது ஓட்டுநரும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.அவர்களை தலிபான்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாகிஸான்-ஆப்கானிஸ்தான் சாலை மூடப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.தலிபான் தீவிரவாதிகளை உருவாக்கியதே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தான் என்பதும், இப்போதும் கூட தலிபான்களுக்கு பாகிஸ்தான் மறைமுக உதவிகள் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.